சென்னை: கிரானைட் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகளுக்கு துபாயில் நட்சத்திர விருந்து நடத்தியது; ஒரு வாரம் நடிகைகளுடன் ஜாலியாக சுற்றித் திரிந்தது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த ரகசிய டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிரானைட் கற்களை வெட்டி பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிஆர்பி நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பழனிச்சாமியின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், கிரானைட் முறைகேடுகளுக்கு உதவிய ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், மணிவண்ணன் ஆகியோரது வீடுகள் உள்பட 34 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான சொத்து ஆவணங்கள், பண்ணை வீடுகள், வங்கி லாக்கர்களுக்கான ஆவணங்கள், டைரிகள் சிக்கின. அதை லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி வெங்கட்ராமன், எஸ்பிக்கள் துரைக்குமார், செந்தில்வேலன், மகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரி காமராஜின் வங்கி லாக்கரை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதில், 544 கிராம் தங்கம், 2392.7 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டாமின் துணை இயக்குனர் ராஜாராம் வங்கி லாக்கரில் 300 கிராம் தங்கம், 390 கிராம் வெள்ளி இருந்தது. லட்சுமணன் என்ற அதிகாரியின் வங்கி லாக்கரில் 28 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 595 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணனின் வங்கி லாக்கர்கள் உள்பட 5 லாக்கர்கள் இன்று சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கிடையில் சோதனையில் ஒரு லாக்கரில் சிக்கிய டைரியை ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்களில் கூறியதாவது: பிஆர்பி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்களும், அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் அரசுக்கு அடிக்கடி மனு கொடுத்துள்ளனர். இதை விசாரிக்க கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்படும். அதிகாரிகள் விசாரிக்காமல் மனுக்களை பிஆர்பி நிறுவனத்துக்கே அனுப்பி உள்ளனர். அங்கு சட்டம் தெரிந்த சிலர் மனுக்களுக்கு பதில் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுப்பார்கள். அவர்கள் அந்த பதிலை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதற்காக அதிகாரிகளுக்கு ஏராளமாக லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை வெளிநாடுகளுக்கு டூர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதிகாரிகள் பலரும் துபாய் செல்வதையே விரும்பியுள்ளனர். நடிகைகளையும் அங்கு ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களில் 3 எழுத்து, 4 எழுத்து, 5 எழுத்து நடிகைகளின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் அவர்களை தேர்வு செய்துள்ளனர்.
பிரபல நடிகையுடன் துபாயில் ஒரு வாரம் ஜாலியாக சுற்றிவிட்டு வந்த அரசு அதிகாரி, பிஆர்பி நிறுவனம் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுத் தள்ளியுள்ளார். மற்றொரு அதிகாரி, 5 எழுத்து நடிகையுடன் துபாய் சென்று ஜாலியாக இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர இரவு போன்று துபாயில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்துக்கு தமிழக அதிகாரிகள் 12 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களோடு, தமிழ் நடிகைகள் மட்டுமல்லாது இந்தி நடிகைகளும் அழைத்து செல்லப்பட்டு விருந்து தடபுடலாக நடந்துள்ளது. அந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகைகளுக்கு வைர மோதிரம், நெக்லஸ் வழங்கப்பட்டுள்ளது. அங்கு சென்று வந்த அதிகாரிகளுக்கும் வைரத்தில் வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிக்கி உள்ள டைரியில், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாமூல் தொகை விரிவாக குறிக்கப்பட்டுள்ளது. அதை வைத்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook