திருச்சி: திருச்சியில் ராணுவ ரகசியங்களுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரியை, காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அன்சாரிக்கு உதவியவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). தஞ்சை தாஜ் ரெசிடென்ஸி பகுதியில் தங்கியிருந்தார். இலங்கைக்கு காய்கறி அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்த இவரிடம் லட்சக்கணக்கில் பணப்புழக்கம் இருந்தது. இதையறிந்த க்யூ பிரிவு போலீசார், 6 மாதமாக தமீம் அன்சாரியை கண்காணித்தனர். திருச்சியில் இருந்து நேற்று இலங்கை செல்ல தமீம் அன்சாரி விமான டிக்கெட் புக் செய்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்த அவரை ஏர்போர்ட் அருகே க்யூ பிரிவு போலீசார் மடக்கினர். அவரிடம் இருந்த சி.டி.க்கள், பென் ட்ரைவ்களை ஆய்வு செய்தபோது, தென்னிந்தியாவில் உள்ள இந்திய ராணுவ அலுவலகங்கள் குறித்த விவரங்கள், ஊட்டி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், விசாகப்பட்டினம் கடற்படை தளம், நாகப்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினம் துறைமுகம், தஞ்சை விமான படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. உடனே அன்சாரியை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்திய ராணுவ தகவல்கள், ரகசியங்களை சேகரித்து, இலங்கை தலைநகர் கொழும்பில் செயல்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு கொடுக்க முயற்சித்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: வியாபாரம் தொடர்பாக இலங்கை சென்று வந்தபோது, அங்கு பாகிஸ்தானை சேர்ந்த சிலருடன் அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் உள்ள ராணுவ மையங்களின் வீடியோ காட்சிகளை சேகரித்து தந்தால், லட்சக்கணக்கில் பணம் தருவதாக அன்சாரியிடம் கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்டதால் அவரை கொழும்பில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளி அமீரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின், தமீம் அன்சாரி இந்தியா வந்துள்ளார். சினிமா தயாரிக்க உள்ளதாகவும் அதற்கான லொக்கேஷனுக்காக சில இடங்களின் வீடியோ தேவைப்படுவதாகவும் அவர் கூறியதை கேட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் ராணுவம் தொடர்பான வீடியோக்களை கொடுத்துள்ளனர். ராணுவம் நடத்திய சாகச போட்டிகளில் பங்கேற்ற விமானங்கள், அவற்றின் திறன், துப்பாக்கிகளின் வகைகள், ஒவ்வொரு மையத்திலும் உள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை போன்றவற்றையும் சேகரித்துள்ளார். கிடைத்த தகவல்களை இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஐ அதிகாரிகளிடம் கொடுக்க முயற்சித்தபோது தமீம் அன்சாரி சிக்கிக் கொண்டுள்ளார். இவருக்கு உதவி செய்துள்ளதாக இதுவரை 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமான 5 பேரை தேடி வருகிறோம். அன்சாரியை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook