ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் : பகுஜன் சமாஜ் கவுன்சிலருக்கு வலை
ஆவடி :வீட்டில் அத்துமீறி நுழைந்து ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரை போலீசார் தேடுகிறார்கள்.
திருநின்றவூர் கோமதிபுரம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (47). திரைத் துறையை சேர்ந்தவர். பெங்களூரில் உள்ளார். இவரது மனைவி பிரேமா (40). தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 10ம் தேதி பிரேமா வீட்டை பூட்டி விட்டு தூங்கும்போது இரவு கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தபோது வாலிபர் ஒருவர் வீட்டில் நுழைந்துள்ளார். பிரேமாவை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். பிரேமா கூச்சலிட்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பினார். இது குறித்து திருநின்றவூர் போலீசில் பிரேமா புகார் நேற்று புகார் கொடுத்தார். எஸ்ஐ மகாதேவராவ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் திருநின்றவூர் பெரிய காலனி பள்ளத்தெருவை சேர்ந்த பார்த்திபன் (28). திருநின்றவூர் பேரூராட்சி 5,வது வார்டு பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் என்பது தெரியவந்தது. இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகிறார்கள்.