கூடங்குளத்தில் அணுசக்தி வாரியம் மீண்டும் ஆய்வு
நெல்லை: கூடங்குளம் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் இந்த வாரம் கூடங்குளம் வர உள்ளனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மின் உற்பத்தி தொடங்க இருந்தது.
ஆனால் அப்பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதனால் தடை பட்ட அணு மின் நிலைய பணிகள் கடந்த மார்ச் 19ம் தேதி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான ஆய்வுகள், அறிக்கைகளை பரிசீலித்த இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த மாதம் 10ம் தேதி முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தது. எனினும் எரிபொருள் நிரப்ப தடை கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்ததால் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கியது.
இதையடுத்து முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடந்து வருகின்றன. எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ள போதிலும், பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்ததால் மீண்டும் ஒரு முறை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் கூறுகையில், ‘இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் ஆய்விற்காக இந்த வாரம் கூடங்குளம் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும்’ என்றார்.