மஞ்சூர்: கேரள மாநில வன எல்லை பகுதியில் இருந்து நீலகிரியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆயுதப்படை, அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள அப்பர்பவானி, கோரகுந்தா, கிண்ணக்கொரை, முள்ளி ஆகியவை தமிழககேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக பகுதிகள். இக்கிராமங்களை ஒட்டியே கேரள மாநிலம் மன்னார்காடு வன சரகம் உள்ளது. மாநில எல்லையில் இருப்பதால் கேரள மாநில வனப்பகுதியில் சிலர் அவ்வப்போது கஞ்சா சாகுபடி, கள்ள சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள வனத்துறை, போலீசார் நடவடிக்கை காரணமாக கஞ்சா சாகுபடி, கள்ள சாராயம் காய்ச்சுதல் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆண்டுக்கு முன் மன்னார்காடு வனப்பகுதியில் கேரளாவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் அட்டப்பாடி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத 15 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வனத்திற்குள் ஊடுருவியதாக மலைவாழ் மக்கள் மூலம் கேரள வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள மன்னார்காடு வனத்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் கொண்ட 4 தனிப்படையினர் அட்டப்பாடி, முள்ளி, நீலகிரி மாவட்டம் மஞ்சூர்அப்பர்பவானி வழியாக கேரள வனப்பகுதிக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஊட்டி ரூரல் டிஎஸ்பி அனிதா தலைமையில் போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் மஞ்சூர்அப்பர்பவானி சாலையில் கேரிங்டன், தாய்சோலா, தொட்டகம்பை, மஞ்சூர்கோவை சாலையில் ஓணிக்கண்டி, கெத்தை, முள்ளி ஆகிய பகுதிகளில் ரோந்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook