பூந்தமல்லி: போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் புதுமாப்பிள்ளை சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். ஆலப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரவாயல் ஏரிக்கரை பாக்கியலட்சுமி நகர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் அருண் (எ) பென்னி (22). வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார். மதுரவாயல் காந்தி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (24). இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலை வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள்.
நேற்று இரவு 9 மணியளிவில் அருண், பார்த்திபன் ஆகியோர் இரவு 9 மணியளவில் ஆலப்பாக்கம் மெயின்ரோடு லட்சுமிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன அருண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்தும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கையில் கத்தி வைத்திருந்ததால் பார்த்திபனை யாரும் நெருங்கவில்லை. பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அருண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அருணுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது. இவரது மனைவி நந்தினி (20). புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook