புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தை கண்டித்து, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட சிலர் இன்று காலை முற்றுகையிட்டனர். அவர்களில் கெஜ்ரிவால் உள்பட முக்கிய பிரமுகர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகையிட வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
இந்நிலையில், நிலக்கரி ஊழலில் ஆளும் காங்கிரசும் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கின்றன என்று சமூக சேவகர் அன்னா குழுவினர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜ தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் வீடுகளை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக டுவிட்டர் இணைய தளம் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். முற்றுகை போராட்டத்துக்கு டெல்லி போலீசார் தடை விதித்தனர். ஆனால், போலீஸ் அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதையடுத்து மன்மோகன், சோனியா, கட்கரி வீடுகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், கெஜ்ரிவால் தரப்பினர் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்மோகன், சோனியா, கட்கரி வீடுகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். மேலும், டெல்லியில் இந்த 3 பேரின் வீடுகளுக்கு அருகில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 6 ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இன்று திறந்திருக்கும் என இன்று காலை திடீரென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் வீடு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் திரண்டனர். அங்குள்ள நடைபாதையில் கெஜ்ரிவால், கோபால் ராய் அமர்ந்தனர். அவர்களுடன் ஏராளமானோர் முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர். அங்கிருந்த போலீசார் உடனடியாக இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். சோனியா வீட்டு முன்பு மணிஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ், நிதின் கட்கரி வீட்டு முன்பு சஞ்சய் சிங் ஆகியோர் முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்களை விடுவித்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook