காட்டுப்பன்றி வேட்டை 2 பேருக்கு அபராதம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் நாகநாதன் உத்தரவின்பேரில், வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலானந்தல் கன்னமடை காப்புக்காட்டில் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் கையில் 10 பிளாஸ்டிக் பொட்டலங்களுடன் சென்றனர். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அந்த வாலிபர்களை மடக்கி, அவர்கள் வைத்திருந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தனர். அதில் காட்டுப்பன்றிக்கறி இருந்தது. அவர்கள் வேலானந்தல் கிராமத்தை சேர்ந்த சேகர் (28), குமார் (28) என்பதும் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.