சட்டீஸ்கர் மாநிலத்தில் கண்ணிவெடி தாக்குதல் 2 சிஆர்பிஎப் வீரர் பலி
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேர் பலியானார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அங்குள்ள தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல்களை களையெடுக்க மத்திய ரிசர்வ் படையினர் (சிஆர்பிஎப்) முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிய வாகனம் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் கே.பி.சிங் மற்றும் முகுல் பர்மான் ஆகிய 2 வீரர்கள் இருந்தனர். பசுகுடா என்ற இடம் அருகே நக்சலைட்கள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி வாகனம் வெடித்து சிதறியது. இதில் 2 வீரர்களும் உடல் சிதறி பலியானார்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதே தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று நக்சல்கள் வைத்த கண்ணி வெடியில் சிஆர்பிஎப் வாகனம் வெடித்து சிதறியது. இதில் ஒரு வீரர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.