கேரளாவில் மின் கட்டணம் 30% அதிகரிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வீடு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மின்கட்டணம் சராசரியாக 30 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம், டெல்லியை தொடர்ந்து கேரளாவிலும் மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, தொழிற்சாலை உள்பட அனைத்து தரப்பினருக்கும் சராசரியாக 30 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்டது. ஜூலை 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 காசுகள் முதல் அதிகபட்சம் ரூ.1.50 வரை யூனிட் ஒன்றுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே 500 யூனிட்டுகளுக்கு கூடுதலாக பயன்படுத்தும் போது அதற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் கேரள மின்வாரியத்துக்கு ரூ.1676 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.