இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை
புதுடெல்லி: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் சிறை பிடித்து சென்றனர். அவர்களை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட 23 தமிழக மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் கிருஷ்ணா மேலும் தெரிவித்தார்.