எண்டோசல்பான் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
புதுடெல்லி: பூச்சிக் கொல்லி மருந்தான எண்டோசல்பானுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தை கேரளாவில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த பூச்சிக் கொல்லி மருந்துக்கு உலக நாடுகள் பல தடை விதித்துள்ளன. கேரளாவில் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து எண்டோசல்பானுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு எண்டோசல்பானுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது.
இந்நிலையில் எண்டோசல்பானுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், தற்போது இருப்பில் இருக்கும் எண்டோசல்பானை அழிக்க ரூ.210 கோடி செலவாகும். எண்டோசல்பானுக்கு கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே எதிர்ப்பு தெரிவிக்காத மாநிலங்களில் இருப்பில் இருக்கும் எண்டோசல்பானை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.