துரைப்பாக்கம் :சென்னையை அடுத்த ராஜீவ்காந்தி சாலையில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிரவுண்ட் நிலம் ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த சாலையில் அரசின் புறம்போக்கு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் சதுப்பு நிலத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தை, ஒரு கும்பல் ஆக்கிரமித்துள்ளது. அதில், குடிசை அமைத்தும், அரை கிரவுண்டு நிலத்தில் கான்கிரீட் வீடு கட்டி ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும், சில இடங்களை விற்பனை செய்வதாகவும் கலெக்டர் அனீஷ் சாப்ரவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் எட்டியப்பன், தாசில்தார் கோவிந்தராஜன், வருவாய் அலுவலர்கள் தனபால், மோகன்குமார், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஜேசிபி இயந்திரங்களுடன் நேற்று பள்ளிக்கரணைக்கு சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. வீட்டு வாடகையும் கொடுக்க இயலவில்லை. அதனால் நாங்கள், அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்தும், விற்றும் நிலத்தை வாங்கி குடியிருந்தோம். ஆக்கிரமிப்பு நிலம் என்று எங்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டோம். அரசு இடம் என்று கூறி அகற்றும் இவர்கள், அப்போதே வந்து அகற்றியிருக்கலாமேÕ என்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 58 குடிசை மற்றும் கான்கிரீட் வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook