சென்னை :ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை டெல்லியில் நடக்கிறது. இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார் என்பது குறித்து, நாளை மாலை 4 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் நேற்று டெல்லி கொண்டுவரப்பட்டன. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பான ஒரு அறையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மாநிலங்களவை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான அக்னிகோத்ரி தலைமையில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் ஆகியோர் காலை 10 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், டெல்லியில் வாக்களிக்காமல் தங்களது சொந்த மாநிலத்திலேயே தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வாக்களித்த 77 எம்.பிக்களின் வாக்குகள் முதலில் எண்ணப்படும். இதை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். பிற்பகல் ஒரு மணியளவில் ஜனாதிபதி பதவி யாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி விடும். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு மாலை 4 மணிக்கு மேல்தான் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook