ரூ870 கோடி மோசடி செய்த பாசி போரக்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி தரவில்லை
கோவை :திருப்பூரில் செயல்பட்டு வந்த ‘பாசி போரக்ஸ்’ நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி, 52,893 பேரிடம் ரூ.870 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. 3 பேர் மீதும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு நடைபெற்று வருகிறது. 14 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி சீனிவாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்ட பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைதொடர்ந்து சாட்சி விசாரணை துவங்கியது. சிபிஐ தரப்பில் வக்கீல் நடராஜன் ஆஜரானார். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் பாசி நிறுவனத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மும்பை கிளை உதவி பொது மேலாளர் ராத் சாட்சியம் அளிக்கையில், ‘இதுவரை வெளிநாட்டில் ஆன்லைன் வர்த்தகம் செய்து கொள்ள அனுமதி கொடுத்தது இல்லை. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கி உள்ளோம். பாசி நிறுவனத்துக்கு உரிமமோ, அனுமதியோ வழங்கவில்லை’ என்றார். சென்னை ரிசர்வ் வங்கி கிளை துணை பொது மேலாளர் சாந்தினி மூன்சந்த்தும் சாட்சியம் அளித்தார். இரு சாட்சிகளிடம் பாசி தரப்பு வக்கீல் ஞானபாரதி குறுக்கு விசாரணை செய்தார். விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.