60 ஆண்டுகளுக்கு முன்பு... ராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் மானூருக்கும் பல குடும்பங்கள் வந்தன.
புதிதாய் வந்தவர்களுக்கு தங்க ஊருக்குள் இடம் கிடைக்கவில்லை. எனவே ஊரையொட்டி சண்முக நதிக்கரையோரம் சில குடும்பங்கள் குடியேறின. அது முன்பு இடுகாடாக பயன்படுத்தப்பட்ட பகுதி. பயன்பாட்டில் இல்லாததால் அந்த இடத்தை சமப்படுத்தி குடிசைகளை அமைக்கத் தொடங்கினார்கள். அப்படி கல்லறைகளை இடித்து தள்ளிவிட்டு, அதன் மேல் குடிசையை அமைத்திருந்தார் நாட்டுத்துரை. இந்த சுடுகாட்டு நிலம், தன் மகளின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கப்போகிறது என்பது அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. நாட்டுத்துரைக்கு 60 வயதிருக்கும். மனைவி இறந்து விட்டதால் ஒரே மகள் பூமணி மீது அதிக பாசம் வைத்திருந்தார். குடிசை போட்டு முதல் இரவே பூமணிக்கு தன்னுள் ஏதோ மாற்றம் தெரிந்தது. உடலுக்குள் ஏதோ ஊடுருவுவது போல இருந்ததால் இது பற்றி தந்தையிடம் கூறினாள். ஆனால் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அன்றுடன் இது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர ஆரம்பித்தது. அடிக்கடி சுயநினைவை இழந்தாள்.
‘வேறு இடத்திற்கு புதிதாக வந்திருப்பதால் இப்படி இருக்கு. போக போக சரியாயிடும்‘ என மகளை தேற்றினார் நாட்டுத்துரை. ஆனால் பூமணிக்கு மட்டும் மனம் ஒப்பவில்லை. தனக்குள் ஏதோ புகுந்திருப்பது போல உணர்ந்தாள். கூலி வேலைக்கு அனைவரும் சென்று விடுவதால் அப்பகுதி பகலில் ஆள் அரவமற்றே இருக்கும். ஒரு நாள் பாதிநாள் வேலையை மட்டும் முடித்து நாட்டுத்துரை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி நடுநடுங்க செய்தது.
காதை கிழிக்கும் உறுமல் சத்தம்.. தலைவிரிகோலம்.. செக்கசெவேல் என சிவந்த கண்கள்.. நாக்கை மடித்து கடித்தபடி அமர்ந்திருந்தாள் பூமணி. தனது மகளா என ஒரு கணம் விக்கித்து போனார் நாட்டுத்துரை. யாரோ ஒருவருடன் பேசி கொண்டிருப்பது போல இருந்த பூமணி, திடீரென அவளுக்கு சம்பந்தமே இல்லாத ஆண் குரலில் ‘அவனை கொல்லாமல் விடமாட்டேன்‘ என தரையில் அடித்து சத்தியம் செய்துவிட்டு மயங்கி சரிந்தாள். அதிர்ச்சியிலிருந்து மீளாத நாட்டுத்துரை தன் மகளுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதை நினைத்து பயந்து போனார். வெளியில் சொன்னால் அவளது வாழ்க்கை பாதிக்கும் என்று பேசாமல் இருந்துவிட்டார். ஆனால் அன்றிரவு நடந்த சம்பவம்தான் இன்னும் பயங்கரமானது.
இரவில் பனி அதிகமாக இருந்ததால், அனைவரும் குடிசைக்குள் சென்று படுத்துவிட்டனர். நள்ளிரவு வேளையில் குடுகுடுப்பை அடிக்கும் சத்தம் கேட்டது. நாட்டுத்துரை குடுகுடுப்பை ஒலியால் எழுந்தார். அவரின் குடிசை அருகே வந்த கோடங்கி வாசலில் குடுகுடுப்பை அடித்து ஏதோ சொல்லத் தொடங்கினான். கண நேரத்தில் கண் விழித்த பூமணி ஆவேசம் கொண்டவளாய் வீட்டை விட்டு வெளியே வந்தாள். கோடங்கியின் கழுத்தை கடித்து, அவனது உயிரை குடித்தாள். இதை அதிர்ச்சியோடு பார்க்க மட்டுமே முடிந்தது நாட்டுத் துரைக்கு. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
மறுநாள் காலையில் கோடங்கி எப்படி செத்தான் என்பது புரியாமல் ஊரே திகைத்து கொண்டிருக்க, நாட்டுத்துரை பயத்தோடு தன் மகளை பார்த்தார். மறுநாளே ஊரை காலி செய்து விட்டு வெளியேறிவிட்டார். பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து மானூர் வாசிகளுக்கு நடந்தது தெரியவந்தது. ஆவி, பூமணி உடலில் புகுந்துதான் கோடங்கியை கொன்றிருக்கிறது என கிராமவாசிகள் நம்பத் தொடங்கினார்கள். அந்த நம்பிக்கை இன்று வரை இருக்கிறது.
‘அந்த கொடூர ஆவி கோடங்கியை ஏன் கொன்னுச்சுங்ற மர்மம் தான் இன்னும் எங்களுக்கு பிடிபடவில்லை. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறம் நாங்க அந்த பழைய சுடுகாட்டு பக்கம் போவதே கிடையாது. எங்க ஊருக்கு கோடங்கி வருவதும் கிடையாது‘ என்கிறார்கள் மானூர் வாசிகள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook