கும்மிடிப்பூண்டி :தமிழக எல்லையான ஆரம்பாக்கமும் ஆந்திர பகுதியான காசாங்காடு குப்பம், பாலகிருஷ்ணாபுரம் குப்பம் பகுதியும் அருகருகே உள்ளது. கோயில் விழா கொண்டாடுவது தொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு இருதரப்பு மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக , ஆந்திர பழவேற்காடு ஏரி மீனவர் சங்கத்தினர், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க கூடாது என காசாங்காடு குப்பத்தினருக்கு தடை விதித்துள்ளனர். அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு பூண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 பேரை ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது. இது குறித்து நொச்சிக்குப்பம் கிராமத்தினர் தடா காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தில் காரூர் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த காரூர் பகுதியை சேர்ந்தவர்களை 40 பேர் சேர்ந்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் தாக்க துரத்தியதோடு, ஆரம்பாக்கம் பகுதியில் கடை வைத்திருந்த காரூர் பகுதியினரை கடை வைக்க கூடாதென்று தடுத்ததாகவும் கூறி காரூர் பகுதி மக்கள் சார்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு மாநில எல்லையோர பகுதியில் பதற்றம் நிலவியதை தொடர்ந்து எல்லைப்புற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பிரச்னையில் சமரசம் ஏற்படுத்தும் விதமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு மாநில மீனவ குப்பங்கள் மற்றும் ஆந்திர மாநில காரூர் கிராம முக்கிய பிரமுகர்களை வைத்து சமாதான கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. கந்தசாமி, ஆந்திர மாநிலம் கூடூர் சப் கலெக்டர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்கள். கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜசேகர், டி.எஸ்.பி ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர்கள் வேணுகோபால், அசோக்மேத்தா, கூடூர் டி.எஸ்.பி சுரேஷ்குமார், சூளுர்பேட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தராவ் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இனி கிராமத்தினர் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வதில்லை என்று உடன்பாடு செய்து கொண்டு சமரசம் செய்து கொண்டனர்.