பச்சை நிறம்.. துர்நாற்றம்.. தோல் அரிப்பு : காவிரி நீரை குடிக்க மக்கள் அச்சம்
பவானி :ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வரதநல்லூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து, மைலம்பாடி, குருப்பநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், சன்னியாசிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நீரேற்று நிலையத்துக்கு அருகில் கடந்த ஒரு மாதமாக தண்ணீரில் பச்சை நிறத்தில் கழிவுகள் கலந்து வருகின்றன. தோலில் தண்ணீர் பட்டால் அரிப்பு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் தண்ணீரை குடிக்கவே பொதுமக்கள் பயப்படுகின்றனர். வரதநல்லூர் ஊராட்சியில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற கலெக்டர் சண்முகத்திடமும் பச்சை நிற தண்ணீரைக் காட்டி, ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதற்கிடையே, தண்ணீர் மாதிரி எடுத்து, திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பரிசோதனை கூடத்துக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.