பெங்களூர் :கர்நாடகாவில் இன்று நடந்த பா.ஜ. எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உள்பட 31 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நாளை பதவியேற்கும் என்று தெரிகிறது. கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் எதிர்ப்புக்கு பணிந்து முதல்வர் சதானந்த கவுடாவை பதவியில் இருந்து பாஜ மேலிடம் நீக்கியது. சமீபத்தில் டெல்லி சென்று பாஜ தலைவர் நிதின் கட்கரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் சதானந்த கவுடா. அதை ஏற்று கொண்ட கட்கரி, எடியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்வராக நியமித்து அறிவித்தார். இதையடுத்து, பெங்களூரில் உள்ள கேப்பிடல் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணிக்கு பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. முன்னாள் பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மாநில பாஜ மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். மேலும் 30 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே அமைச்சர் பொறுப்பு வகித்த உதாசி, பசவராஜ் பொம்மை, ஷோபா கரந்த் லாஜே, ஆர்.அசோக் உள்ளிட்டவர்களுடன் புதிதாக 15 பேர் அமைச்சர்களாகின்றனர்.
கர்நாடாகாவில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் முதல்வர் சதானந்த கவுடா, புதிய முதல்வராக தேர்வான ஜெகதீஷ் ஷெட்டர் இருவரும் கவர்னர் பரத்வாஜை நேரில் சந்திக்கின்றனர். அப்போது சதானந்தா தனது ராஜினாமா கடிதத்தையும், புதிய முதல்வராக பதவி ஏற்க தன்னை அழைப்பதுடன் புதிய அமைச்சர்களின் பட்டியலை ஜெகதீஷ் ஷெட்டரும் கவர்னரிடம் அளிக்கின்றனர். இதையடுத்து கவர்னர் புதிய அமைச்சரவையை பதவி ஏற்க அழைப்பு விடுப்பார். நாளையே பதவி ஏற்பு விழா நடத்த கவர்னர் உத்தரவிட்டால் அதற்கு தயாராக அனைத்து ஏற்பாடுகளையும் ஜெகதீஷ் ஷெட்டர் செய்திருக்கிறார். துணை முதல்வர் பதவிக்கு மாநில பாஜ தலைவர் ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், கோவிந்த கரஜோ ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. சதானந்த கவுடாவுக்கு மாநில பாஜ தலைவர் பதவி அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் கர்நாடக பா.ஜ.வில் மீண்டும் கோஷ்டி பூசல் உருவாகும் என்று கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook