ஒடிசாவில் விபத்து : அங்கன்வாடி சுவர் இடிந்ததில் 5 குழந்தைகள் பரிதாப சாவு
புவனேஸ்வர் :ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 5 குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தன. 6 குழந்தைகள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள ரான்பூரில் நெலியா அப்பர் பிரைமரி ஸ்கூல் உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் 3 வயது முதல் 5 வயதுகு உட்பட்ட சிறுகுழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையமும் உள்ளது. நேற்று மதியம் குழந்தைகளுக்கு சாப்பாடு போடப்பட்டது. அப்போது ஒரு பக்க சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதில் சுவரை ஒட்டி அமர்ந்திருந்த குழந்தைகள் சிக்கின. பல குழந்தைகளின் மண்டை உடைந்தது. இதில் அதே இடத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்தன. 6 குழந்தைகள் மற்றும் சமையல்காரர், உதவியாளர், ஒரு பெண் உள்பட 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் முதலில் ரான்பூர் மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கன்வாடி செயல்பட்ட கட்டிடம் 60 ஆண்டுகள் பழமையானதாகும். அண்மையில் பெய்த மழையில் கட்டிடம் மேலும் பலவீனம் ஆனதாக குழந்தைகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.