மேலும் 4 பேர் சாவு : அமர்நாத் யாத்திரை பலி 51ஆக உயர்வு
ஸ்ரீநகர் :அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்திரிகர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. உயிர் பலி அதிகரித்து வருவதால் கலக்கம் அடைந்துள்ள மாநில அரசு, உடல் நலம் சரியில்லாதவர்கள் அதனை மறைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. கடந்த 15 நாட்களில் சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2ம் தேதியுடன் முடிகிறது. அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் பல இடங்களில் மலை பாதைகளை கடந்து செல்ல வேண்டும். இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த பயணம் மிகவும் ஆபத்தானது. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் 100 பேர் மாரடைப்பு மற்றும் இதர காரணங்களால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து யாத்திரை செல்பவர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நேற்று முன்தினம் வரை அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களில் 47 பேர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தவர்கள். நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மாநில அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதய நோய் உள்ள பக்தர்கள் அதனை மறைக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.