ஆங்கில படங்களை பார்த்து தமிழ் படங்கள் காப்பியா?
சென்னை: ஆங்கில படங்களைப் பார்த்து தமிழ் படங்கள் காப்பி அடிக்கப்படுகிறதா என்றதற்கு இயக்குனர் மகிழ் திருமேனி பதில் அளித்தார். கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மகிழ் திருமேனி. ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’ படங்களை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் தற்போது ஸ்கிரிப்ட் மற்றும் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றம், வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காதல் படங்களைத்தான் ரசிப்பார்கள் என்ற காலம் மாறி இருக்கிறது. இதனால் ‘பருத்திவீரன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பல்வேறு கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெற்றி பெறுகின்றன.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவான ‘தடையறத் தாக்க’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் ஆக்ஷன், த்ரில்லர் பாணியில் ரகசிய போலீஸ் கதை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது. இதில் முழுவதும் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஆங்கில படங்களைப் பார்த்து தமிழ் படங்கள் காப்பி அடிக்கப்படுகிறதா என்று கேட்கின்றனர். ஹாலிவுட் தரத்துக்கு தற்போது தமிழ் படங்கள் வருகிறது. இதனால் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் நுட்பங்கள் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை மற்ற மொழி மற்றும் வெளிநாட்டு படங்களை பார்க்கும்போதுதான் தெரிய வருகிறது. கோலிவுட் இயக்குனர்கள் ஹாலிவுட் படம் இயக்கும் அளவுக்கு திறமையுடன் இருக்கிறார்கள்.