கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா
சென்னை: கதை கேட்காமல் தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார் நயன்தாரா. பிரபுதேவாவு டனான பிரிவுக்கு பிறகு தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்து வருகிறார் நயன்தாரா. ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னும் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுமையாக கேட்பதுடன் தனது வேடத்தின் தன்மையையும் கேட்டறிவது வழக்கம்.
இயக்குனர் மணிரத்னம் தற்போது ‘கடல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் புதுமுகம் கவுதம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் கால்ஷீட் பிரச்னை மற்றும் இயக்குனர் மணிரத்னத்துக்கு அவரது தோற்றத்தில் திருப்தி ஏற்படாததால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மாஜி நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய வேடமொன்றிற்காக பிரபல ஹீரோயினை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததால் அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி நயன்தாராவிடம் அவர் கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். கதையை கூறுவதாக மணிரத்னம் தெரிவித்தபோது, ‘உங்கள் ஸ்கிரிப்ட் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கதை கேட்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறிவிட்டார்.