வண்டலூர் பூங்காவில் விஷமற்ற பாம்புகளுக்கு இல்லம் திறப்பு
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர் வெளியிட்ட அறிக்கை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாம்பு கூடத்தில் கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகிய 4 வகை விஷப்பாம்புகளும், சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நீர்க்கத்தான் பாம்பு, பச்சைப்பாம்பு என 2 வகை மண்ணுளிப்பாம்பு, அழகுப் பாம்பு, கொம்பேறி மூக்கன் என 2 வகை மலைப்பாம்பு என 10 வகை விஷமற்ற பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விஷமற்ற பாம்புகளை பார்வையாளர்கள் எளிதாகக் கண்டுகளிக்கும் வகையிலும் பாம்புகளுக்கு தேவையான வசதிகளுடன் புதியதாக ஒரு இல்லம் ரூ.4 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தின் முகப்பில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பார்வையாளர்கள் பாம்புகளை கண்ணாடிகளின் வழியாக எளிதாக காணும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பாம்புகளுக்கு தண்ணீர் தொட்டி, மறைவிடங்கள், இயற்கை பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாம்பு கூடங்கள், மரங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.