திருக்கோவிலூர்: கள்ளத்தொடர்பால் கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் இன்று கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். விவசாயி. இவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அத்தியூர்பெரியபள்ளியூர் சாலையிலுள்ள ஒரு கிணற்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். பகண்டை கூட்டு ரோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜெயச்சந்திரனை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, அவரது மனைவி அஞ்சலை என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் இன்றுகாலை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் ஏழுமலை அளித்த வாக்குமூலம்: ஜெயச்சந்திரனுக்கும் எனது மனைவி அஞ்சலைக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனடிப்படையில் ஜெயச்சந்திரன் ரூ.1 லட்சம் கடனாக கொடுத்தார். இந்த கடன் விவகாரம் ஜெயச்சந்திரன் மனைவி பச்சையம்மாளுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குள் பிரச்னை வெடிக்க தொடங்கியது. கடன் பணத்தை திருப்பி தருமாறு ஜெயச்சந்திரன் அடிக்கடி கேட்டுவந்தார். சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்தில் 45 ஆயிரத்தை கொடுத்தேன். மீதமுள்ள தொகையை ஜெயச்சந்திரன் கேட்டு தொந்தரவு செய்தார். மீதமுள்ள பாக்கித் தொகையை கொடுத்து விடு அல்லது உன் மனைவியை நிரந்தரமாக என்னிடம் அனுப்பி வை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்து அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினேன். இதற்காக அஞ்சலையை அனுப்பி கடந்த 7ம் தேதி ஜெயச்சந்திரனை அத்தியூர்பெரியபள்ளியூர் சாலைக்கு அழைத்து வர செய்தேன். பின்னர் அஞ்சலையுடன் சேர்ந்து ஜெயச்சந்திரனை தடியால் சரமாரியாக தாக்கியதில் அவர் இறந்தார். அவர் அணிந்திருந்த லுங்கியால் கைகால்களை கட்டி விட்டு அங்குள்ள கிணற்றில் வீசினோம். இவ்வாறு ஏழுமலை வாக்குமூலம் அளித்துள்ளார். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook