திருமுல்லைவாயலில் பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பெயின்ட் திருட்டு
ஆவடி: திருமுல்லைவாயலில் ஹார்டுவேர்ஸ் கடையை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பெயின்ட் திருடப்பட்டுள்ளது. அம்பத்தூர் செல்லியம்மன் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (42). திருமுல்லைவாயல்சோழம்பேடு சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர் நாராயணன் இன்று காலை கடையை திறக்க வந்தார். முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததால் திடுக்கிட்டார். உள்ளே போய் பார்த்தார். கடையில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெயின்ட் டின்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. ராஜேஷ் கொடுத்த புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்ஐ வீரமணி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.