திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி மற்றும் தாசில்தார் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டா கேட்டு விண்ணப்பித்த 82 பேரில் 5 பேருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. மீதிஉள்ள மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் மக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரத்தின சபாபதி தலைமையில் நடந்தது. வட்டாட்சியர் புண்ணியகோட்டி, துணை வட்டாட்சியர் வின்சென்ட், நகராட்சி தலைவர் கமாண்டோ பாஸ்கரன், கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். பட்டா கேட்டு விண்ணப்பித்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலையின் மனைவி சலோமி மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 5 நிமிடத்தில் பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் கோரி 175க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொடங்கிய ஜமாபந்திக்கு தாசில்தார் பிரசன்னா தலைமை வகித்தார். இதில் பட்டா, ரேஷன்கார்டு உள்ளிட்ட 157 மனுக்கள் பெறப்பட்டது. பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு வருவாய் தீர்வாய அலுவலர் செல்லமுத்து தலைமை வகித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook