திருவில்லிபுத்தூரில் பரபரப்பு ஆண்டாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவு கோயிலை திறந்து சோதனை
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் நள்ளிரவில் கோயிலை திறந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. மதுரையில் பாஜ மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி தென்மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நேற்று விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து இரவு நடை சாத்தப்பட்டது. நள்ளிரவு 11.30 மணியளவில் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அறநிலையத்துறை, கோயில் தக்காருக்கு தகவல் தெரிவித்த போலீசார், மீண்டும் கோயிலை திறக்கச் செய்து மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர். பெரிய பெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்பட கோயில் மூலஸ்தானம் தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது. இருப்பினும் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நள்ளிரவு நடந்த சோதனையை அறிந்து ஏராளமான மக்கள் கோயில் முன் குவிந்தனர். இதனால் திருவில்லிபுத்தூரில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.