சென்னை: சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் நஞ்சப்பன் (இந்திய கம்யூ.), ரங்கசாமி (அதிமுக), பாலபாரதி, சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில்: சிவசமுத்திரம் புனல் மின்திட்டம், மேகதாது புனல் மின்திட்டம், ராசி மணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம் ஆகிய 4 திட்டங்கள் தேசிய புனல் மின் குழுமத்தின் மூலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம், தமிழகம், தேசிய மின்கழகம் ஆகியவை முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு, 2008ல் ஒப்புதல் தந்தது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, ஒகேனக்கல் மின்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டியது மத்திய அரசுதான். ஆனால் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. .
தமிழக எல்லைக்குள் இருக்கிற குந்தா நதியிலிருந்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி ஆகிய 3 மாநில அரசு சம்பந்தப்பட்டது. இதில் காவிரி ஆணையமும் வருகிறது. இதை மத்திய அரசுதான் கவனிக்க வேண்டும். உண்மை நிலையை சொன்னால் அதை குற்றச்சாட்டு என்கிறார்கள். கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அப்படி ஒப்புதல் தந்தால்தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். மேலும், காற்றாலை மின்சார தொழில்நுட்ப மையம் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் கடலுக்குள் காற்றாலை அமைக்கலாம் என்றும், அதற்கான சாத்திய கூறுகளையும் இந்த மையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் ஆய்வுக்கு பின்னர், மத்திய அரசு அனுமதி பெற்று தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும். இந்த நடைமுறைகளுக்கு குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். தனியார் நிறுவனங்களை கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருத்துருவும் பரிசீலனையில் உள்ளது. அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook