தமிழகத்தில் 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் பேட்டி
கன்னியாகுமரி: எச்.ஐ.வி. எய்ட்ஸ், நல்வாழ்வு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ரெட்ரிப்பன் ரயில் சுற்றி வருகிறது. இந்த ரயில் நேற்று கன்னியாகுமரி வந்தது. ரெட்ரிப்பன் ரயில் கண்காட்சி தொடக்க விழா நேற்று காலை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் தொடங்கியது. அப்போது, தமிழ்நாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் முதன்முறையாக 1986ம் ஆண்டு எய்ட்ஸ் பரவியிருப்பது சோதனை மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது இந்தியாவில் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 96 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் 2004 ஆண்டில் 1.13 சதவீதமாக இருந்தது. அது தற்போது 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 42 எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர 782 சிறிய மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12ம் தேதி எய்ட்ஸ் கண்காட்சி ரயில் டெல்லியில் இருந்து புறப்பட்டது. இது 9 மாநிலங்கள் வழியாக தற்போது கன்னியாகுமரி வந்துள்ளது.