கோயில் திருவிழா விபத்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: சரத்குமார் கோரிக்கை
சென்னை: சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீப காலத்தில் ஆலய திருவிழாக்களில் தேர் மற்றும் பல்லக்கில் மின்சாரம் தாக்கி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுவாக தேர் வடம்பிடித்து வரும் போதோ, பல்லக்கு ஊர்வலம் வரும்போதோ முன்னெச்சரிக்கையாக மின் கம்பிகள் உரசாமல் இருக்க செய்வதோடு குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தும் பணியையும் மின்வாரிய அலுவலர்களும், போலீசாரும் மேற்கொள்வார்கள். தேர்வலம் மற்றும் சுவாமி ஊர்வலம் வரும் பாதைகளில், போலீசார், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், மின்வாரிய துறையினர் உள்ளிட்டோர் முன்கூட்டியே ஆய்வு மேற்கொண்டு இத்தகைய அசம்பாவிதங்களை நடக்காமல் இருக்க திட்டமிட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர், பல்லக்கு ஊர்வல தினத்துக்கு பல நாட்கள் முன்பாகவே, தேர் மற்றும் பல்லக்குகள் சீர்செய்து பராமரிக்கப்பட வேண்டும். தேர் வலப்பாதைகள் செப்பனிடப்பட வேண்டும். ஆன்மிக விழாக்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் இறந்தவர்க ளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.