தெகல்கா வழக்கில் 4 ஆண்டு சிறை எதிர்த்து பா.ஜ. தலைவர் அப்பீல்
புதுடெல்லி: போலி ஆயுத பேர வழக் கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பா.ஜ. தலைவர் பங்காரு லட்சுமண், சிபிஐ கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். பா.ஜ. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் 2001,ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தபோது, ராணுவ கான்ட்ராக்ட் வாங்கி தருவதற்காக தெகல்கா பத்திரிகை நிருபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றார். இதை தெகல்கா நிறுவனம் ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் கடந்த 28,ம் தேதி சிபிஐ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. பங்காரு லட்சுமணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பங்காரு லட்சுமண் சார்பாக நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.