ஐதராபாத்துடன் மோதல் அதிரடிக்கு திரும்புமா டெல்லி
ஐபிஎல்லில் இன்று மாலை 4 மணிக்கு ஐதராபாத் , டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த அந்த அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது. பீட்டர்சன் இல்லாதது சிறிய பலவீனத்தை உருவாக்கியுள்ளது. ராஸ்டெய்லர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவருக்கு பதிலாக மாற்று வெளிநாட்டு வீரரை களமிறக்கி பார்க்கலாம். ஓபனிங்கில் சேவாக் , வார்னர் ஜோடி 10 ஓவர்கள் வரையாவது தாக்குபிடித்து ஆடினால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். பந்துவீச்சில் மோர்க்கல், உமேஷ்யாதவ் நெருக்கடி கொடுக்ககூடும். கடந்த ஆட்டத்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது பலனை கொடுக்கவில்லை. அதனால் ஆரோன் நீக்கப்பட்டு நெகிக்கு வாய்ப்பு கொடுக்கபடக்கூடும் என தெரிகிறது. ஐதராபாத் அணி இந்த சீசனில் தோல்விக்கு மேல் தோல்வி சந்தித்து வருகிறது. அந்த அணி 12 ஆட்டத்தில் 9 தோல்விகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. எனினும் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி சற்று சிறப்பாக ஆட முயற்சிக்கும்.