ஐபிஎல்லில் நேற்று இரவு வான்கடே மைதானத்தில் மும்பை , பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. தினேஷ்கார்த்திக் 39 பந்தில் 1 சிக்சர், 3 பவுண்டரியுடன் 44 ரன்னும், சச்சின் 27 பந்தில் 4 பவுண்டரியுடன் 24 ரன்னும், அம்பாதிராயுடு 22, பொல்லார்டு 21, ஹர்பஜன்சிங் 20 ரன் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் வினய்குமார், ஹர்ஷால் படேல், முரளீதரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பெங்களூர் அதிரடியில் மிரட்டியது. தில்ஷான் 19 ரன்னில் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். கெய்ல் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி ரன்வேட்டையாடினார். அவர் 59 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 82 ரன்கள் விளாசினார். கோக்லி 25 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 36 ரன் எடுத்தார். முடிவில் பெங்களூர் அணி 18 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்கு இது 6வது வெற்றியாகும். அதேவேளையில் மும்பை 5வது தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை கெய்ல் தட்டி சென்றார்.
மும்பை அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் சரிவில் இருந்து மீளமுடியாமல் போனது. வினய்குமார் வீசிய 2வது ஓவரில் பிராங்க்ளின் 1, ரோகித்சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் பவர்பிளேயில் மும்பை அணி மந்தமாக ஆடியது. ஒருகட்டத்தில் 120 ரன்களைகூட மும்பை கடக்காது என்ற நிலையில் பொல்லார்டும், ஹர்பஜன்சிங்கும் அதிரடியாக ஆடியதால் சற்று கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. எனினும் கெய்ல் சூறாவளி வேகத்தில் ரன் குவித்ததால் மும்பை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
கேப்டன்ஸ் கார்னர் கோக்லி: மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில ஆட்டங்களில் எனது பேட்டிங் மோசமாக இருந்தது. எனினும் சகவீரர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஹர்பஜன்சிங்: 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். கெய்லை விரைவாக ஆட்டமிழக்க செய்திருந்தால் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்க கூடும். இன்னும் எங்களுக்கு 4 ஆட்டங்கள் உள்ளது. அதனால் அதிகம் கவலைப்பட தேவையில்லை.
ஹீரோ கார்னர் ஆட்டநாயகன் விருதுபெற்ற கெய்ல் கூறுகையில், அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இது. மலிங்கா பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டு ஆடினோம். முதலிலேயே அவர் 3 ஓவர்கள் வீசினார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. எனினும் சமாளித்து ஆடி வெற்றி பெற்றோம் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook