ஜெகனுக்கு சொந்தமான நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்க சிபிஐ அதிரடி நடவடிக்கை
ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீது சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவர் மீது 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை வரும் 28ம் தேதி தொடங்குகிறது. விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ கோர்ட் நேற்று முன்தினம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில் ஜெகனுக்கு சொந்தமான ஜகதி பப்ளிகேஷன்ஸ், இந்திரா டிவி மற்றும் ஜனனி இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகிய 3 நிறுவனங்களின் வங்கிக் கணக்கை முடக்க சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்நிறுவனங்கள் கணக்கு வைத்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. அதில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ. 365 கோடி சொத்து உள்ளது. அவரது தந்தை ஒய்.எஸ்.ஆர். ஆந்திர முதல்வராக இருந்த போது பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டது. அதற்கு பிரதிபலனாக ஜெகன் நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. இந்த முறைகேடுகள் குறித்து ஐகோர்ட் உத்தரவுப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 102ன் கீழ் விசாரணை முடியும் வரை ஜெகன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.