விளையாடிய போது பரிதாபம் : கையெறி குண்டு வெடித்து காஷ்மீர் சிறுவன் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கலாமாபாத் பகுதியில் உள்ள ஷிஹமா கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிக் அகமது ஷா. வயது 8. தனது வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளியில் நேற்று தாரிக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வயல்வெளியில் வெடிக்காத கையெறி குண்டு ஒன்று கிடந்தது. அதன் ஆபத்தை உணராத தாரிக் அதை கையில் எடுத்தான். பந்து போல தூக்கி பிடித்து விளையாடினான். தூரத்திலிருந்து சிறுவன் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த அவனது பெற்றோர்களுக்கு தாரிக் கையில் இருந்தது குண்டு என்பது தெரியவில்லை.
திடீரென சிறுவன் கையிலிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் சிறுவனின் முகம் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தான். தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டனர். கடந்த 2008ம் ஆண்டு இந்த பகுதியில் அடிக்கடி என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது தீவிரவாதிகள் விட்டுச் சென்ற குண்டாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.