வெற்றிக்கு வரிந்து கட்டும் மும்பை,சென்னை
ஐபிஎல்லில் இன்று மாலை 4 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை,சென்னை அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 10 ஆட்டத்தில் 6 வெற்றி 4 தோல்வி பெற்றுள்ளது. கடைசியாக புனே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. துவக்க ஜோடி சரியாக அமையாதது பலவீனமாக உள்ளது. சச்சின் ரன்சேர்க்க துவங்கியுள்ளது புதுதெம்பை கொடுத்துள்ளது. ரோகித்சர்மா, பிராங்க்ளின், அம்பாதிராயுடு ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து அதிரடி காட்டினால் வலுவான ஸ்கோரை குவிக்கலாம். மலிங்காவின் யார்க்கர், ஓஜாவின் சுழல், முனாப்பட்டேலின் நேர்த்தியான வேகம் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். பொல்லார்டு களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை. சென்னை அணி 11 ஆட்டத்தில் தலா 5 வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நிலையில் கடைசியாக ஐதராபாத்தை வீழ்த்தியது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. துவக்க வீரராக களமிறங்கும் டூ பிளசிஸ் அதிக பந்துகளை எதிர்கொள்வது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது. அவர் சராசரியாக 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நிற்கிறார். ஆனால் ஏறக்குறைய பந்துகளுக்கு நிகராகத்தான் ரன் சேர்க்கிறார். டோனியும் இதே கதியில் தான் உள்ளார். தானாகவே முன் வரிசையில் களமிறங்கும் அவரும் கடைசி வரை களத்தில் நின்று பந்துகளுக்கு நிகராகத்தான் ரன் சேர்க்கிறார். இவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதிரடிக்கு வித்திட்டால் பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். ரெய்னா தற்போது தான் தேறி வருகிறார். இன்றும் அவர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை குவிக்கலாம். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை அணி இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.