புதுடெல்லி :தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் மையமாக தேசிய தீவிரவாத தடுப்பு மையம் செயல்படும். மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக மாநில முதல்வர்கள் மாநாடு கடந்த மாதம் 16,ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இதில், ‘தேசிய தீவிரவாத தடுப்பு மையம்’ குறித்தும் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. இது முக்கிய பிரச்னை என்பதால், இதுகுறித்து தனியாக முதல்வர்கள் மாநாட்டை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்பட சில மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றும் தேதி தனியாக மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்டி விவாதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்கான முதல்வர்கள் மாநாடு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காலை தொடங்கியது.
மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் உள்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னை அல்ல. மாநில அரசின் அதிகாரங்களில் மத்திய அரசு எப்போதும் தலையிடாது. உள்நாட்டு பாதுகாப்புக்கு தீவிரவாதம் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் மையமாகவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் செயல்படும். மேலும் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு திறனுக்கு துணையாக இந்த மையம் இருக்குமே தவிர, அதை முடக்குவதாக இருக்காது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் சிறப்பாக செயல்பட அதன் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பரவலான கருத்தொற்றுமை ஏற்படுவது மிகவும் அவசியம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook