பொன்னேரி :பேங்க்கில் உதவி செய்வது போல் நடித்து, பீகார் வாலிபரிடம் ரூ.79 ஆயிரத்தை மர்ம நபர்கள் 2 பேர் கொள்ளையடித்து சென்றனர். பொன்னேரியில் நேற்று நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பாபுலு (27). மீஞ்சூர் அருகே உள்ள இலவம்பேடு கிராமத்தில் கன்டெய்னர் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். இதே கம்பெனியில் பீகாரை சேர்ந்த 15 பேர் ஊழியராக உள்ளனர். நேற்று பாபுலு, பீகார் ஊழியர்களின் வீட்டிற்கு பணம் அனுப்ப ரூ.80 ஆயிரம் எடுத்துக்கொண்டு, பொன்னேரி பஜாரில் உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது பாபுலுவை அணுகிய டிப்டாப் ஆசாமி ஒருவர், பணம் டெபாசிட் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி பாபுலுவும் அவரிடம் படிவத்தை தந்தார். சிலிப்பில் பணத்தை வரிசைப்படி பிரித்து எழுதுவதற்காக பாபுலுவிடம் ரூ. 80 ஆயிரத்தை பெற்றுள்ளார்.
அருகில் இருந்த நபர் உதவி செய்வது போல நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து பணம் இருந்த கட்டின் முன், பின் பகுதியில் ரூ.500 மட்டும் வைத்துவிட்டு மீதமுள்ள பணத்திற்கு பதில் வெள்ளை பேப்பரை வைத்து பாபுலுவிடம் கொடுத்து விட்டு நைசாக நழுவி சென்றனர். கேஷியர் கவுன்டர் அருகே சென்றபோதுதான் பணத்துக்கு பதில் பேப்பர் இருப்பது பாபுலுவுக்கு தெரியவந்தது. இது குறித்து பாபுலு, பொன்னேரி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து வங்கியில் மோசடி செய்த டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகிறார். மேலும் பேங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மோசடி வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று விசாரணை நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக பொன்னேரி பகுதியில் கடை பூட்டை உடைத்து கொள்ளை, கோயில் உண்டியல் கொள்ளை, வங்கியில் நூதன மோசடி உள்ளிட்ட சம்பவம் தொடர்கிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook