வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு பெருவிழா : மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது
செங்கல்பட்டு :மாமல்லபுரத்தில் இன்று மாலை நடக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவில் பாமக தலைவர் ராமதாஸ் பேசுகிறார். வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா, மாமல்லபுரம் கடற்கரையில் இன்று மாலை நடக்கிறது. வன்னியர் சங்க மாநில தலைவர் குரு எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் வரவேற்று பேசுகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து கார், வேன், பஸ்களில் ஏராளமானோர் மாமல்லபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். மாமல்லபுரம் மற்றும் வழி நெடுகிலும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தலைவர்களை வரவேற்று போஸ்டர்கள், கட்,அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. மறைமலைநகர் நகரத்தில் இருந்து முன்னாள் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்களில் வன்னியர் சங்க, பாமக நிர்வாகிகள் செல்கின்றனர்.