பாகிஸ்தான், ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கர் நகர் மார்க்கெட்டில் உள்ள கடையில் இன்று காலை பாதுகாப்பு படையினர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை நோக்கி வந்த தற்கொலை தீவிரவாதி, உடலில் கட்டி இருந்த குண்டுகளை திடீரென வெடிக்க செய்தான். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில், 4 ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் உடல் சிதறி பலியானார்கள். 42 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்கள் நொறுங்கின. எங்கு பார்த்தாலும் ரத்த சகதியாக காணப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு 15 முதல் 17 வயது வரையே இருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ரஷ்யாவின் மகாச்கலா நகரில் இரட்டை குண்டு வெடிப்புகள் நடந்தன. மகாச்கலாவில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டில் நேற்றிரவு கார் குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் திரண்டிருந்த போது மற்றொரு குண்டு வெடித்தது. இதில், 12 போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் 3 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.