கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு சுசீந்திரத்தில் அரசு சார்பில் சிலை
சென்னை :சட்டசபையில் இன்று பேரவை விதி 110,ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கை: இருபதாம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய கவிஞர்களில் ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவரது பாடல்களில் உண்மையும், அழகும் கைகோர்த்து செல்வதை உணர முடியும். கவிமணி வாழ்ந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், தமிழ் இலக்கிய, இலக்கணங்களை நன்கு கற்று கவிபுனையும் ஆற்றலை பெற்றிருந்தார். பழந்தமிழ் பண்பும், தமிழ் மணமும், புதுமை கருத்துகளும் நிறைந்த பல பாடல்களை கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பான மலரும் மாலையும் நூலில் இருந்து, இவருடைய நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல் மற்றும் குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமை என்று வலியுறுத்தியவர் கவிமணி. குழந்தைகளுக்காக தாலாட்டு பாடல்களை பாடியுள்ளார். இப்படிப்பட்ட தலைசிறந்த தமிழ் கவிஞரை, தமிழ் பற்றாளரை போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தமிழக அரசின் சார்பில் சிலை வைக்கப்படும்.