சென்னை :சேத்துப்பட்டில் இன்ஜினியர் வீட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 9,வது அவென்யூவில் வசிப்பவர் கிரண்குமார் பாலச்சந்திரன்(38). இன்ஜினியர். இவரது மனைவி ஆஷா (35). இவரும் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார் கிரண்குமார். இவரது வீட்டில் இருந்த உறவினர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு கிரண்குமார் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். தரையில் துணிமணிகள் சிதறிக் கிடந்தன. வீட்டில் இருந்த 4 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தன. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.
பீரோவில் இருந்த செயின், மோதிரம், வளையல், பிரேஸ்லெட் உள்பட 50 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி, சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் கிரண்குமார் இன்று புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள் விரைந்துவந்து, மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். இன்ஜினியர் வீட்டின் பக்கத்து வீட்டு சுவர் வழியாக மர்ம நபர்கள் வந்துள்ளனர். பின்னர், கதவை உடைத்து கொள்ளையடித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இன்ஜினியர் வீட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook