விழுப்புரம் :பட்டப்பகலில் ரூ.50 லட்சம் கொள்ளை போனது குறித்து டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் செல்வம்(38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது நண்பர் செஞ்சி பெரியநொளந்தையைச் சேர்ந்தவர் திருமலை(35). இவர், தாம்பரத்தில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், தனது காரில் செல்வத்துடன் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரம் எச்டிஎப்சி வங்கிக்கு வந்தார். காரை ரவிக்குமார்(30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வங்கியில் இருந்து 100அடி தள்ளி காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் வங்கிக்கு சென்று செல்வம், தனது கணக்கிலிருந்து ரூ.50 லட்சத்தை எடுத்து வந்து காரில் இருந்த திருமலையிடம் கொடுத்துள்ளார். பின்னர் திருமலை, செல்வம் ஆகியோர் அருகில் உள்ள டீக்கடை சென்றனர். காரின் முன்பக்க கதவை திறந்துவைத்துவிட்டு பண பெட்டியுடன் டிரைவர் ரவிக்குமார்,
தனது சீட்டில் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், காரின் பின்பக்க டயர் பஞ்சராகியுள்ளது என்று கூறியுள்ளார். உடனே காரிலிருந்து இறங்கி அவர், பஞ்சரான டயரை மாற்றினார். அவருக்கு 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்துள்ளனர். பின்னர் காருக்குள் சென்று பார்த்தபோது பணப்பெட்டியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், திருமலை மற்றும் செல்வத்திடம் தெரிவித்தார். தகவலறிந்த டிஐஜி சண்முகவேல், எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து டிஐஜி சண்முகவேல் இன்று காலை கூறுகையில், ரூ.50 லட்சம் கொள்ளை போன வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் எஸ்பி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் நகரிக்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது. திருவெறும்பூர், சென்னைக்கும் தனிப்படை போலீசார் சென்றுள்ளனர். டிரைவர், திருமலை, செல்வம் மற்றும் ஆட்டோ டிரைவர்களிடம் மற்றொரு தனிப்படையினர், துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook