சிறைகளில் மோப்ப நாய் பிரிவு 18 குட்டிகளுக்கு 9 மாத பயிற்சி
சென்னை :போதை பொருட்கள், செல்போன், வெடிபொருட்கள் நடமாட்டத்தை கண்டுபிடித்து தடுப்பதற்காக மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 18 நாய் குட்டிகள் வாங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பை சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தடை செய்யப்பட்ட பொருட்களான போதை பொருட்கள், செல்போன், வெடிபொருட்கள் போன்றவற்றை சிறைக்குள் கடத்தப்படுவதை கண்டறிய புழல் மத்திய சிறை ,1 மற்றும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், கோவை ஆகிய மத்திய சிறைகளில் தலா 2 மோப்ப நாய்கள் அடங்கிய மோப்ப நாய் பிரிவு ரூ.18.72 லட்சம் செலவில் ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக 18 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு சென்னை மற்றும் கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பயிற்சி நிலையத்தில் 9 மாத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.