திருப்பதி கோயிலில் அடாவடி : ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., தெலுங்கு தேசம் வலியுறுத்தல்
ஐதராபாத் :திருப்பதி கோயிலில் அடாவடியில் ஈடுபட்ட ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை வலியுறுத்தி உள்ளன.
ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பிரசாரம் செய்தவற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் கடப்பா எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வந்தார். நேற்று முன்தினம் ஏழுமலையான் கோயிலிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். ஜெகன், கிறிஸ்தவர் என்பதால் கோயில் நடைமுறைப்படி ஏழுமலையானை மனதார நம்புவதாக உறுதி அளிக்கும் படிவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவரிடம் கையெழுத்து கேட்டனர். ஆனால் 2009ம் ஆண்டு தான் கோயிலுக்கு வந்திருப்பதாகவும்,
அப்போது கையெழுத்து போட்டிருப்பதால் இப்போது தேவையில்லை என்றும் கூறி புதிதாக படிவம் தர மறுத்து விட்டார். மேலும், விஐபி தரிசனத்தில் ஆதரவாளர்கள் 60 பேருடன் சென்று தரிசனம் செய்தார். ஜெகனின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு கட்சிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளன. காங்கிரஸ் எம்பி ஹனுமந்த ராவ் கூறுகையில், கடவுள் முன்னால் ஜெகன் தனது அடாவடியை காட்டியுள்ளார். ஒரு வாரத்துக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கோயிலில் மவுன விரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். தெலுங்கு தேச தலைவரும் முன்னாள் அமைச்சருமான சந்திரமோகன் கூறுகையில், கோயிலுக்குள் ஜெய் ஜெகன் என ஜெகன் ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர். இதனால் கோயிலின் புனிதத்தையே கெடுத்து விட்டனர் என்றார்.