சென்னை :டிட்கோ நிறுவனம் வரும் ஐந்தாண்டுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்களை அமைக்க உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து பேசியதாவது: டிட்கோ நிறுவனம் ரூ.170 கோடி முதலீட்டில் பாலிமர் பொருட்கள் உற்பத்தி வளாகத்தினை திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் கிராமத்தில் உருவாக்கும். இதில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க கூடிய 100 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வசதிகள் இருக்கும். இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டிட்கோ நிறுவனம் வரும் ஐந்தாண்டுகளில் சுமார் ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக, சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்களை அமைக்க உள்ளது. முதல்கட்டமாக தென் மாவட்டங்களில் 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.1000 கோடி முதலீட்டில் 100 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் நிறுவனங்களின் தொழில் வளாகங்களில் மிகவும் பழமையான ஓசூர்,
ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, இருங்காட்டு கோட்டை, கடலூர், தூத்துக்குடி, மானாமதுரை, புதுக் கோட்டை ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.20 கோடி செலவிடும். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நாள் ஒன்றுக்கு 100 டன் உற்பத்தி திறனுடைய ஈரப்பதம் கொண்ட நுண்ணிய கால்சியம் கார்பனேட் ஆலையை ரூ.30 கோடி செலவில் ஆலை வளாகத்திலேயே அமைக்கும். தமிழ்நாடு மேகனசைட் நிறுவனம் தனது சொந்த செலவில் ரூ.12 கோடி முதலீட்டில் 2.1 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டதினை தொடங்கும். சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு தயாரிக்கும் ஆலை ஒன்றினை ரூ.2 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர், வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும். தமிழ்நாடு உப்பு நிறுவனம் உடல்நலத்திற்கு உகந்த, குறைந்தளவு சோடியம் கொண்ட உப்பினை தயார் செய்து வெளிசந்தையில் விற்கும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook