கோவை :திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர்கள் மிரட்டப்பட்ட புகாரில், ஆயுதப்படை ஐ.ஜி. பிரமோத் குமார் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை விமானம் மூலம் இன்று காலை கோவை அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பாசி என்ற பெயரில் ஆன் லைன் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், பொதுமக்களிடம் ரூ.650 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நிறுவனத்தை மூடிவிட்டு நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகியோர் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீஸ் அதிகாரிகள் சிலர் மிரட்டி பணம் பறித்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. கமலவள்ளியை தனி வீட்டில் 4 நாள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டிஐஜி செங்கதிர், எஸ்.பி. தேன்மொழி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்தனர். புகாரில் சிக்கிய டிஎஸ்பி ராஜேந்திரன்,
இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமாருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தற்போது பிரமோத்குமார், ஆயுதப்படை ஐ.ஜி.யாக உள்ளார். அவரை விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் அவர் தலைமறைவானார். இதற்கிடையே சென்னை கோயம்பேடு மற்றும் டெல்லியில் உள்ள பிரமோத்குமாரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் பதுங்கி இருந்த பிரமோத்குமாரை சிபிஐ தனிப்படை அதிகாரிகள் நேற்று மதியம் கைது செய்தனர். இன்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர். அங்கு தனி இடத்தில் வைத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. நிதி நிறுவன மோசடி குறித்தும் கமலவள்ளியிடம் இருந்து எவ்வளவு கோடிகைமாறியது என்றும் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
சஸ்பெண்ட் ஆகிறார் இதற்கிடையே, பிரமோத்குமார் கைது செய்யப்பட்ட தகவலை தமிழக டிஜிபி அலுவலகத்துக்கும், உள்துறை அலுவலகத்துக்கும் சிபிஐ அதிகாரிகள் முறைப்படி தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பிரமோத்குமாரை சஸ்பெண்ட் செய்ய உள்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook