நெல்லை :மதுரை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தென்மாவட்ட கல்குவாரிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பல குவாரிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் வரும் 10, 11ம் தேதிகளில் பாஜ மாநில மாநாடு நடக்கிறது. இதில் மூத்த தலைவர் அத்வானி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாநகர் ராமர் கோயில் அருகே சைக்கிளில் டைம்பாம் வெடித்தது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அவற்றில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் கரிமருந்து இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் அனுமதியின்றி வைத்திருக்கும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போலீசார் நேற்றும், இன்றும் கல்குவாரிகளில் சோதனை நடத்தி வெடிமருந்துகளை கைப்பற்றி வருகின்றனர். நேற்று இரவு கங்கைகொண்டான் மானூர் சாலையில் ஒரு கல்குவாரியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை (100 கிலோ) அம்மோனியம் நைட்ரேட் வெடி உப்பு சிக்கியது. மேலும் 189 ஜெலட்டின் குச்சிகள், 398 டெட்டனேட்டர் பீஸ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. குவாரி மேலாளர் ராமலிங்கம் (25) கைது செய்யப்பட்டார். குவாரி உரிமையாளர் சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல் பல குவாரிகளில் சோதனை நடத்தியதில் மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மானூர், கடையம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளிலும் போலீசார் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook