அசாம் படகு விபத்தில் மேலும் 5 உடல்கள் மீட்பு : பலி 108 ஆக உயர்வு
துப்ரி :அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதி ஓடுகிறது. கடந்த திங்கள்கிழமை துப்ரி துறைமுகத்திலிருந்து 300 பேரை ஏற்றிக் கொண்டு நதியின் அக்கரைக்கு சென்று கொண்டிருந்த இயந்திரபடகு ஒன்று சூறாவளி காற்றில் சிக்கி நடு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் நதியில் மூழ்கினர். நீச்சல் தெரிந்த ஒரு சிலர் மட்டும் நீந்தி உயிர் தப்பினர். 80 பேர் வரை உயிர் தப்பியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 103 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று காலை 3 உடல்களும், மதியம் 2 உடல்களும் கிடைத்தன. இதை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. வங்க தேச பகுதியில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. இதற்கிடையில் வங்கதேசத்தில் ஒதுங்கும் உடல்களை இந்தியா கொண்டுவருவது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.